கொளுத்தும் கத்திரி வெயிலால் மக்கள் அவதி சாலைகள் வெறிச்சோடின


கொளுத்தும் கத்திரி வெயிலால் மக்கள் அவதி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 8 May 2020 11:13 PM GMT (Updated: 8 May 2020 11:13 PM GMT)

கொளுத்தும் கத்திரி வெயிலால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.

புதுச்சேரி,

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. புதுவையில் சாலைகளில் வெயில் கோர தாண்டவம் ஆடும் வகையில் அனல் காற்று வீசியதால் சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலமான புதுவையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் வெயில் கொளுத்தியதால் பெரும்பாலானவர்கள் பகல் பொழுதில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வாகனம் ஓட்டி செல்லும் பெண்கள் தங்கள் முகத்தில் துப்பட்டா போன்ற துணி வகைகளை சுற்றியபடி செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் குளிர் கண்ணாடிகள், தொப்பி அணிந்தபடி செல்வதையும் காண முடிகிறது. சாலைகளில் செல்பவர் கள் குடைபிடித்தபடி செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

நுங்கு விற்பனை

உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இதுதவிர இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக மருத்துவ குணம் உள்ள நுங்கை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஆங்காங்கே நுங்குவை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

மற்ற நீர்ச்சத்து நிறைந்த பொருட்களை விட நுங்கின் விலை குறைவாக இருப்பதால் அதனை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

அனல்காற்று வீசும்

வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரை புதுவை, தமிழகத்தின் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என்றும், அதிகபட்சமாக வெயில் 113 டிகிரி வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது வரை 110 டிகிரிக்குள் வெயில் பதிவாகி வரும் நிலையில், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை யாரும் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதேபோல், வரும் நாட்களில் அனல்காற்றும், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் மத்திய அரசும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதில் குறிப்பாக, தாகம் இல்லை என்றாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியமாக வெளியில் செல்ல நேர்ந்தால், தலையை துணியாலோ அல்லது தொப்பியை கொண்டு மூடியபடியும், குடை பிடித்தபடியும் செல்ல வேண்டும். இரவில் ஜன்னல்களை திறந்து வைத்தும், கீழ்தளத்திலும் தூங்குவது சிறந்தது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கின்றனர்.

Next Story