சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வழி தெரியாமல் தவிக்கும் வழிகாட்டிகள்


சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால்  வழி தெரியாமல் தவிக்கும் வழிகாட்டிகள்
x
தினத்தந்தி 9 May 2020 4:54 AM IST (Updated: 9 May 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடப்பதால் இவைகள் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடப்பதால் இவைகள் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் தவித்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிய இவர்கள் தங்களது வாழ்க்கைக்கு வழி தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

சுற்றுலா தலங்கள் மூடல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 18-ந்தேதி முதல் மூடப்பட்டன. அதன்படி தஞ்சையில் பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை கடந்த 51 நாட்களாக மூடப்பட்டுள்ளன.

360 சுற்றுலா வழிகாட்டிகள்

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் கால நினைவுச்சின்னங்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவை உள்ளன. சுற்றுலா தலமாக விளங்கும் கோவில்கள் மட்டும் 21 ஆயிரத்து 600 உள்ளன. இந்த சுற்றலா தலங்களில் மட்டும் 360 பேர் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சுற்றுலாத்துறையின் மூலம் 6 மாத படிப்பு படித்து விட்டு சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இவர்கள் சுற்றுலா தலங்களில் உள்ள இடங்களை சுற்றிக்காண்பிப்பதோடு, அதன் வரலாற்றையும் அவர்களின் மொழிகளிலேயே எடுத்துக்கூறி விளக்கம் அளிப்பதோடு, அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து வருகிறார்கள்.

9 மொழிகள் பேசுபவர்கள்

ஒவ்வொரு சுற்றுலா வழிகாட்டியும் அதிகபட்சமாக 20 பேர் வரை அழைத்துச்செல்வார்கள். இவர்களுக்கு ஒரே ஊரில் என்றால் நாள் கட்டணமாக ரூ.600 வழங்கப்படும். வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் 600 ரூபாயுடன் ரூ.200 படியாக சேர்த்து வழங்கப்படும். இரவு தங்க வேண்டுமானால் படி ரூ.400 வழங்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களை பொறுத்துத்தான் இவர்களின் வருமானம் இருக்கும்.

இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 9 மொழிகள் வரை பேச தெரிந்தவர்கள் ஆவார்கள். பெரும்பாலும் தமிழ், ஆங்கிலம், இந்தி பேச தெரிந்தவர்களாக உள்ளனர். கடந்த 51 நாட்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளதால் இவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். பலருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் இவர்கள் தங்களது வாழ்க்கைக்கு வழி தெரியாமல் தவித்து வருவதாக கூறுகிறார்கள்.

நிவாரணம் வேண்டும்

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி சங்க மாநில செயலாளர் ராஜா கூறுகையில், “சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் நாங்கள் வருமானம் இன்றி குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். சுற்றுலாத்துறையினர் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சியினர், சுற்றுலா முகவர்கள் எங்களை தொடர்பு கொண்டு வழிகாட்டி வேண்டும் என்பார்கள். சுற்றுலா முகவர்கள், கட்டணத்தை நிர்ணயம் செய்து அவர்களே எங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவார்கள்.

ஆனால் தற்போது சுற்றுலா தலங்கள் எப்போது திறக்கப்படும்? என்றே தெரியவில்லை.

அவ்வாறு திறந்தாலும் வெளிநாட்டு பயணிகள், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை. கொரோனா பிரச்சினைக்கு தீர்வு கண்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும் எங்களின் நிலைமை சீரடைய எவ்வளவு காலம் ஆகுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

எனவே தமிழக அரசு சுற்றுலா வழிகாட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டு வருமானம் இன்றி தவிக்கும் எங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story