பிடுங்கி நடப்பட்ட மரங்கள் துளிர்விட்டன: தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் மீண்டும் கருகி வரும் நிலை


பிடுங்கி நடப்பட்ட மரங்கள் துளிர்விட்டன: தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் மீண்டும் கருகி வரும் நிலை
x
தினத்தந்தி 8 May 2020 11:15 PM GMT (Updated: 2020-05-09T05:18:15+05:30)

திருப்பரங்குன்றம் அருகே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சாலையில் வேருடன் பிடுங்கி நடப்பட்ட மரங்கள் துளிர்விட்டன. அவை மீண்டும் வெயிலில் கருகி வருவதால் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பேச்சு இல்லாத கிராமமான கோ.புதுப்பட்டியில் ரூ.1,264 கோடியில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய உள்ளது. இதனையொட்டி மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.20 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரையில் உள்ள 20 அடி அகல கிராம சாலை 60 அடி அகலமாக விரிவுபடுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் சாலையோரத்தில் இருந்த 80-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு புதிதாக போடப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையின் பக்கவாட்டில் கிரேன் மூலம் பாதுகாப்பாக ஊன்றப்பட்டது.

இதில் சில மரங்கள் வேரூன்றி துளிர் விட்டு முளைக்கிறது. அவற்றை பார்ப்பதற்கு குளிர்ச்சியாக உள்ளது. அதே சமயம் ஒரு சில மரங்கள் தண்ணீர் இன்றி காயும் நிலையில் உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தண்ணீர் ஊற்றி பாதுகாக்கப்படாத நிலை உள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் வேரூன்றி துளிர் விட்ட மரங்கள் கூட பட்டு போய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. நிழல் தரும் மரங்களை பாதுகாக்கும் உயரிய நோக்கத்தோடு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று நடப்பட்டன. அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரிக்காமல் விட்டால் செய்த முயற்சிக்கு பலன் இல்லாமல் போய்விடும். எனவே துளிர் விட்ட மரங்கள் மீண்டும் கருகிவிடாமல் தடுக்க விடா முயற்சியாக தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story