கர்நாடகத்திற்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அதிகம் வழங்க வேண்டும் - மத்திய சுகாதார மந்திரியிடம், சுதாகர் கோரிக்கை


கர்நாடகத்திற்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அதிகம் வழங்க வேண்டும் - மத்திய சுகாதார மந்திரியிடம், சுதாகர் கோரிக்கை
x
தினத்தந்தி 8 May 2020 11:56 PM GMT (Updated: 2020-05-09T05:26:34+05:30)

கர்நாடகத்திற்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அதிகம் வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரியிடம் சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகருடன் காணொலி காட்சி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மந்திரி சுதாகர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் பணிகளை மாநில அரசு மத்திய அரசு பிறப்பித்துள்ள வழகாட்டுதல்களை பின்பற்றி மேற்கொண்டு வருகிறது. அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து செயல்படை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

தரமான சிகிச்சைகள்

ஏற்கனவே கூறியதுபோல், தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைப்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறோம். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைபடுத்தி உள்ளோம். நாங்கள் மரணங்களை தடுக்க தீவிரமாக போராடி வருகிறோம். ஆனால் இதுவரை 31 பேர் மரணம் அடைந்திருப்பது துரதிர்ஷ்டம்.

தொலை மருத்துவம் மற்றும் தொலை தீவிர சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் 2 பரிசோதனை கூடங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளோம். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம்.

பரிசோதனை கூடங்கள்

பெங்களூருவில் தனியார் நிறுவன வளாகத்தில் பரிசோதனை கூடங்கள் செயல்படுகின்றன. அதையும் பயன்படுத்த அனுமதி வழங்கினால், பரிசோதனையின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்போம். மேலும் கொரோனா பரிசோதனை உபகரணங்களை கர்நாடகத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும்.

முதல்-மந்திரி எடியூரப்பா தினமும் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். அத்துடன் ஆப்தமித்ரா என்ற உதவி மையத்தை தொடங்கியுள்ளோம்.

தேவையான வசதிகள்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு எழும் சவால்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். வெளிநாடுகளில் சிக்கியுள்ள கன்னடர்களை இங்கு தனிமைபடுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story