கோவையில் பயங்கரம்: குடிபோதை தகராறில் கார் டிரைவர் படுகொலை - மெக்கானிக் வெறிச்செயல்


கோவையில் பயங்கரம்: குடிபோதை தகராறில் கார் டிரைவர் படுகொலை - மெக்கானிக் வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 May 2020 4:15 AM IST (Updated: 9 May 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவரை படுகொலை செய்த மெக்கானிக்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா என்கிற சிவக்குமார் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் கோவை கணபதி பூம்புகார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவருடன் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பாலத்துறையை சேர்ந்த மணிகண்டன் (23), ஸ்ரீநாத் உள்பட 3 பேர் தங்கி உள்ளனர். மணிகண்டன் மெக்கானிக்காக உள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் கோவையிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறந்ததால், அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து இரவில் மது அருந்தினார்கள்.

சிவக்குமார் ஒரு இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இதனால் அவரிடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவில் சிவக்குமார் மது அருந்தி முடிந்ததும், தனது கையில் பிளேடால் கீறியவாறு, காதலியின் பெயரை எழுதி உள்ளார்.

அதைப்பார்த்ததும் மணிகண்டன், சிவக்குமாரை கிண்டல் செய்ததுடன், அவருடைய காதலியை தவறாக பேசி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது சிவக்குமார், மணிகண்டனை கொன்றுவிடுவதாக கூறி உள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த மற்ற 2 பேரும் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒன்றாக படுத்து தூங்கினார்கள். நேற்று அதிகாலை 4 மணியளவில் மணிகண்டன் திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது இரவில் சிவக்குமார் தன்னுடன் தகராறில் ஈடுபட்டது அவரது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து காலையில் எழுந்தவுடன் சிவக்குமார் தன்னை கொன்றுவிடுவாரோ என்ற பயம் மணிகண்டனுக்கு ஏற்பட்டது. எனவே அதற்கு முன், அவரை கொலை செய்து விடவேண்டும் என்கிற வெறி அவருக்குள் எழுந்தது. இதனை தொடர்ந்து மணிகண்டன், அங்கு இருந்த உடற்பயிற்சி செய்யும் கருவியை (தம்புல்ஸ்) எடுத்து சிவக்குமார் தலையில் ஓங்கி அடித்தார்.

இதனால் படுகாயம்அடைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் அலறினார். உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஸ்ரீநாத் உள்பட 2 பேர் எழுந்து பார்த்தபோது, சிவக்குமார் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே அவர்கள் 2 பேரும் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு பெரிய அளவில் குற்ற சம்பவங்கள் நடக்கவில்லை. ஆனால் டாஸ்மாக் கடையை திறந்ததும், நேற்று குடிபோதை தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்து உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால்தான் குற்ற சம்பவங்கள் குறையும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

Next Story