மன்னார்குடியில் மதுக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்


மன்னார்குடியில் மதுக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 12:02 AM GMT (Updated: 9 May 2020 12:02 AM GMT)

மன்னார்குடியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மன்னார்குடி, 

மன்னார்குடியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பழைய தஞ்சாவூர் சாலை பிரிவில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி அந்தோணியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அவர்கள் மதுக்கடையை திறக்க கூடாது என கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மதுக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர் பெருமன்றம்

இதேபோல் மதுக்கடையை மூடக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சியில் சமூக இடைவெளியை கடை பிடித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் மன்ற நிர்வாகிகள் லோகநாதன், ரெத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story