கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - மத்திய-மாநில அரசுகளுக்கு சித்தராமையா வேண்டுகோள்


கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - மத்திய-மாநில அரசுகளுக்கு சித்தராமையா வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 May 2020 12:06 AM GMT (Updated: 9 May 2020 12:06 AM GMT)

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்த வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பாவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது, கர்நாடக அரசு அறிவித்துள்ள நிதி உதவி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விடுபட்டுள்ள பல்வேறு வகை தொழிலாளர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

“கர்நாடகத்தில் உள்ள பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என்னை நேரில் சந்தித்து, அரசு அறிவித்துள்ள சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தில் தங்களை சேர்க்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறிய பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிதலைவராக எனது கடமையாகும்.

பாதிப்புகளை தடுத்திருக்கலாம்

மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது. சர்வதேச விமானங்களை ஆரம்பத்திலேயே நிறுத்தி, அங்கிருந்து வந்தவர்களை தனிமைபடுத்தி கண்காணித்து இருந்தால், பாதிப்புகளை தடுத்திருக்கலாம்.

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் முதல்-மந்திரி வலியுறுத்த வேண்டும். பிரதமர் கேர் நிதிக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி வந்துள்ளது. அதில் ஒரு பைசா கூட கர்நாடகத்திற்கு வழங்கவில்லை. கர்நாடகத்தில் இருந்து தொழில் நிறுவனங்கள் வழங்கிய நிதியையாவது நமக்கு கொடுத்திருக்க வேண்டும்.

வாங்கும் சக்தி இருக்காது

மக்களிடம் பணம் இல்லை என்றால் அவர்களுக்கு வாங்கும் சக்தி இருக்காது. வாங்குபவர்கள் இல்லை என்றால், சந்தையில் எந்த பொருட்களுக்கும் தேவை அதிகம் இருக்காது. மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதனால் கர்நாடகத்திற்கு உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உதவி திட்டத்தை அறிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் பல்வேறு தரப்பினர் அதில் சேர்க்கப்படவில்லை.

தொழிலாளர்களுக்கு ஒரு முறை உதவியாக ரூ.5 ஆயிரம் கொடுப்பதற்கு பதிலாக கொரோனா பிரச்சினை முடிவடையும் வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் நிதி உள்ளது. அந்த நிதியை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. அதனால் இருக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ வேண்டும்.

உடல் கவச உடைகள்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மருத்துவ ஊழியர்களுக்கு உடல் கவச உடைகள், கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இருப்பு வைக்க வேண்டும். ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பூ, தக்காளி, பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தச்சு வேலை செய்பவர்கள், கம்மார் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்களையும் தொகுப்பு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.”

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story