மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது


மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது
x
தினத்தந்தி 9 May 2020 5:41 AM IST (Updated: 9 May 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி, 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம், சித்தேரி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்களுக்கு சேரன்குளம் மைய அ.தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் சேரன்குளம் மனோகரன், நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிர் இழப்பு என்பது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 32 பேர் ஆவர். இதில் 27 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். மீதி 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த நிலை தான் உள்ளது.

தேவையான நடவடிக்கை

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் 0.6 சதவீதம் தான் கொரோனா இறப்பு நிலை உள்ளது. மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தேவையானவற்றை அரசு செய்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை அரசே கொண்டு சேர்த்து வருகிறது.

மதுபான கடைகளை உடனடியாக மூடுவது சாத்தியமில்லை. படிப்படியாக கட்டுப்படுத்தப்படும். பிறமாநிலங்களில் திறப்பதை போல் தான் தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வலங்கைமான்

முன்னதாக வலங்கைமான் பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதியில் ஏழை-எளிய மக்களுக்கும், நலிவுற்ற தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் இளவரசன், நகர செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story