மயிலாடுதுறையில், குடிபோதையில் தகராறு: தட்டிக்கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை 3 பேர் கைது


மயிலாடுதுறையில், குடிபோதையில் தகராறு: தட்டிக்கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2020 12:35 AM GMT (Updated: 9 May 2020 12:35 AM GMT)

மயிலாடுதுறையில், குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

குத்தாலம், 

மயிலாடுதுறையில், குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம்(வயது 36). இவர், ஒரு இரும்புக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(24), தட்சிணாமூர்த்தி என்பவரிடம் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். மேலும் அந்த தெருவில் சென்றவர்களையும் அநாகரீகமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை மாரிச்செல்வம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது மாரிசெல்வத்தை அவரது மனைவி உமா மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

கத்தியால் குத்திக்கொலை

இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரன் தனது நண்பர்கள் சேது(24), சூர்யா(21) ஆகிய 2 பேருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரிசெல்வத்தின் வீட்டுக்கு சென்றார். பின்னர் 3 பேரும் சேர்ந்து மீண்டும் மாரிசெல்வத்துடன் தகராறு செய்தனர். தகராறு முற்றியநிலையில் ராஜேந்திரன், சூர்யா ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரிசெல்வத்தை பிடித்துக்கொள்ள, சேது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிறு, கை, தொடை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

அதை தடுக்க வந்த மாரிசெல்வத்தின் தந்தை எட்டப்பராஜனை தாக்கி விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்தியால் குத்தப்பட்டதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரிசெல்வத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், சேது, சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மாரிசெல்வத்திற்கு உமா(27) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே குடிபோதையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்தபகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் அதிகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதால் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மதுக்கடையும் திறக்கப்பட்டுள்ளதால் மது மற்றும் கஞ்சா போதை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை போலீசார் தடுக்க வேண்டும் என்றனர்.

Next Story