பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 9 May 2020 12:41 AM GMT (Updated: 9 May 2020 12:41 AM GMT)

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட தலைவர் இளவரசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷங்கள்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தியதால் இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை வாய்ப்பு காணல் நீராக மாறும் நிலை உருவாகும். இதனால் பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்படும். ஓய்வூதிய பலன்கள் எதிர்காலத்தில் மறுக்கப்படும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஒப்படைப்பு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ரத்து, பொது சேமநல நிதி வட்டி குறைப்பு ஆகியவற்றை கண்டித்து முக கவசம் அணிந்தபடி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வாசு, அரசு செவிலியர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தரங்கம்பாடி

இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாரிதட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் மரியஜோசப்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சமூக விலகலை பின்பற்றி சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story