நாகையில் காணொலி காட்சி மூலம், விவசாயிகளிடம் குறைகள் கேட்ட கலெக்டர்


நாகையில் காணொலி காட்சி மூலம், விவசாயிகளிடம் குறைகள் கேட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 9 May 2020 1:04 AM GMT (Updated: 2020-05-09T06:34:06+05:30)

நாகையில் காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் கலெக்டர் பிரவீன் நாயர் குறைகள் கேட்டார்.

நாகப்பட்டினம், 

நாகையில் காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் கலெக்டர் பிரவீன் நாயர் குறைகள் கேட்டார்.

காணொலி காட்சி மூலம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெறவில்லை. இந்தநிலையில் நாகை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் கலந்துகொண்டு விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் குறைகள் கேட்டார். அப்போது விவசாயிகள் கூறுகையில்,

அரசின் கவனத்திற்கு

நடப்பு குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூர் அணையிலிருந்து அடுத்தமாதம்(ஜூன்) தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குறுவை பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய வகையில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் ஆகியவற்றை தடையின்றி கிடைக்க அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்க வேளாண்மை துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.

தலைஞாயிறு

இதேபோல் தலைஞாயிறு பகுதி விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் கலெக்டர் பிரவீன்நாயர் குறைகள் கேட்டார். அப்போது விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பந்தம் பேசுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் குடும்ப கார்டுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, உதவி வேளாண்மை அலுவலர் ரவிசந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story