குமரியில் போலீஸ்காரருக்கு கொரோனா மாமியார் வீட்டுக்கு வந்த இடத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி


குமரியில் போலீஸ்காரருக்கு கொரோனா மாமியார் வீட்டுக்கு வந்த இடத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 9 May 2020 1:18 AM GMT (Updated: 2020-05-09T06:48:16+05:30)

குமரியில் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாமியார் வீட்டுக்கு வந்த இடத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில், 

குமரியில் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாமியார் வீட்டுக்கு வந்த இடத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6 பேருக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 16 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். ஒரு பெண் மட்டும் சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வெளி மாநிலம், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் குமரி மாவட்டத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கேரளா, மும்பை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்தும், சென்னை, பட்டுக்கோட்டை, கடலூர் மாவட்டம் அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த 6 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் 2 பேருக்கு உறுதியானது

6 பேரில் 5 வயது பெண் குழந்தையும் ஒன்று. அந்த குழந்தையின் பெற்றோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்த குழந்தைக்கு கொரோனா இருப்பது குறித்த தகவலை கேரள மாநில அதிகாரிகளுக்கு, குமரி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தைக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் அறந்தாங்கி பகுதியில் இருந்து வந்தவர் கார் டிரைவர் ஆவார். அவர் அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் 2 பேரைத் தவிர மற்ற 4 பேரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

போலீஸ்காரர்

இந்த 2 பேரில் ஒருவர் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஆவார். இவர் அங்கு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் சொந்த ஊர் நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை ஆகும். போலீஸ்காரரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருந்து வந்தார். அதனால் அவரை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து மாமியார் வீடு உள்ள குமரி மாவட்டம் வந்தார்.

அவருக்கு ஆரல்வாய்மொழியில் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சுங்கான்கடைக்கு சென்று போலீஸ்காரரிடமும், மனைவி குடும்பத்தாரிடமும் தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸ்காரரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொரோனா சிகிச்சை தனிப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் போலீஸ்காரரின் மனைவி மற்றும் மாமியாருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதியவர்

இதேபோல் மற்றொருவர் மார்த்தாண்டம் அருகில் உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஆவார். வியாபாரி. இவருடைய மகள் தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக முதியவர் இருந்து வந்தார். இந்த நிலையில் விரிகோட்டில் உள்ள மனைவியையும், மற்றொரு மகளையும் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சையில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு ஆரல்வாய்மொழியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Next Story