தக்கலையில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணம் அனைத்து கட்சியினர் அஞ்சலி


தக்கலையில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணம் அனைத்து கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 9 May 2020 2:08 AM GMT (Updated: 9 May 2020 2:08 AM GMT)

தக்கலையில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பத்மநாபபுரம், 

தக்கலையில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர்

தமிழக முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ். இவர், குமரி மாவட்டம் தக்கலை கார்மல் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 74 வயதான இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார்.

எனினும் உடல்நலம் சீராக இல்லை. தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ் நேற்று காலையில் மரணம் அடைந்தார்.

அஞ்சலி

அவரது இறுதி சடங்கு நேற்று மாலை அவரது சொந்த ஊரில் நடந்தது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண்தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது மற்றும் அனைத்து கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மரணம் அடைந்த அவருக்கு ஜேசுராஜம் என்ற மனைவியும், ஆன்றோ ஸ்டாலின், சேவியர் தயானந்த் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கு.லாரன்ஸ், கடந்த 1991-ம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை வனத்துறை அமைச்சராக இருந்தார்.

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் கட்சி பொறுப்பு வகித்தவர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2006-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். தி.மு.க.வில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேவியர் தயானந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லாரன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

Next Story