மாட்டு வண்டி தொழிலாளியை கொலை செய்த வழக்கு: அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது


மாட்டு வண்டி தொழிலாளியை கொலை செய்த வழக்கு: அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2020 3:36 AM GMT (Updated: 9 May 2020 3:36 AM GMT)

திருச்சி அருகே மாட்டு வண்டி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜீயபுரம், 

திருச்சி அருகே மாட்டு வண்டி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மாட்டு வண்டி தொழிலாளி

திருச்சி அருகே குழுமணி பேரூர் கீழத்தெருவை சேர்ந்த காத்தானின் மகன் ரஞ்சித்குமார் (வயது 20). மாட்டு வண்டி தொழிலாளி. நேற்று முன்தினம் காலை பேரூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நண்பர்களுடன் சென்று ரஞ்சித்குமார் மது வாங்கி குடித்தார். பின்னர் அவர் மதியம் 3 மணிக்கு தனது வீட்டிற்கு வந்தார்.

குடிபோதையில் இருந்த அவரை, குடிபோதையில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது

இந்தநிலையில் ரஞ்சித்தை கொலை செய்த கொலையாளிகள் திருப்பராய்த்துறை காவிரி ஆற்று பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, அங்கு 6 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(22), அவருடைய அண்ணன் கோபி(24), லோகநாதன்(23), உதயா(22), கோகுல்(22), அழகேசன்(22) என்பது தெரியவந்தது. மேலும் முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமார் குடிபோதையில் வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று அவருடைய தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருடைய தலையில் கல்லை போட முயன்றதால், ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாக வெங்கடேசனும், கோபியும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story