குடிபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி


குடிபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி
x
தினத்தந்தி 9 May 2020 3:51 AM GMT (Updated: 2020-05-09T09:21:38+05:30)

குடிபோதையில் மனைவியை அரிவாளால் தொழிலாளி வெட்டினார்.

துறையூர், 

குடிபோதையில் மனைவியை அரிவாளால் தொழிலாளி வெட்டினார்.

மனைவியை வெட்டிய தொழிலாளி

துறையூரில் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (31). இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுகடை திறந்ததால் இரவு மதுக்குடித்து விட்டு, செந்தில்குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் கவிதா அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல்

* துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியை சேர்ந்த செந்தில்(39) நேற்று முன்தினம் குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்ற போது, கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர், அங்கிருந்த செவிலியர் செந்தில், மருத்துவ பணியாளர் மணிகண்டன் ஆகியோரை காலால் உதைத்து தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 10-க்கும் மேற்பட்டடோர் விபத்தில் சிக்கியதற்காகவும், 10-க்கும் மேற்பட்டோர் விஷம் குடித்தும் சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

வாலிபர் சாவு

* மணிகண்டம் அருகே மொபட் மீது கார் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் வினோத்குமாரை(34) கைது செய்தனர். அத்துடன் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குப்பையில் திடீர் தீ

* திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி வடக்கு மலை அருகே உள்ள கல்குவாரியில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்தது. தகவல் அறிந்த நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

வாலிபர் கைது

* கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் டிக்-டாக் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் ஒரு வாலிபர் கீரிப்பிள்ளையை கையில் வைத்து கொண்டு அதற்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது போன்று பதிவு செய்து இருந்தார்.

இதை அறிந்த வனத்துறையினர் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட நபர் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் போதாவூரை சேர்ந்த முருகேசன் மகன் மாணிக்கம்(25) என்பதும், இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

* பெட்டவாய்த்தலையை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநாவுக்கரசு(24) என்பவரை ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

2 பேருக்கு அரிவாள் வெட்டு

* திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கார்த்தி நேற்று முன்தினம் மாலை தனது ஆட்டோவில் சென்ற போது, மதுபோதையில் வந்த2 பேர், ஆட்டோவை மறித்து சாவியை பிடுங்கி கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர்கள் 8 பேருடன் சென்று தன்னிடம் தகராறு செய்த 2 பேரை அரிவாளால் வெட்டினார். இதை கண்ட அப்பகுதியினர் கார்த்தியின் நண்பர்களை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோஷ்டி மோதலில் 8 பேர் கைது

* துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த வலம்புரிஜான் (42) தனது இருசக்கர வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனின் வீட்டு வாசலில் நிறுத்தினார். இதனால் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் தரப்பினர் தாக்கியதில் வலம்புரிஜான், அவருடைய மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பையும் சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

* ஊரடங்கு உத்தரவால் வருமானம் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்யவேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவெறும்பூர் கடைவீதியில் சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரில் மதுபாட்டில்கள் கடத்தல்

* துவாக்குடி அருகே டாஸ்மாக் கடையில் 48 மதுபாட்டில்களை சட்ட விரோதமாக வாங்கி காரில் கடத்த முயன்ற 3 பேரையும், அதற்கு உடந்தையாக இருந்த 3 பேரையும் துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.

முதியவர் தற்கொலை

* மணப்பாறை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி(75) அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த இவர் பொய்கைமலை அடிவாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*திருச்சி மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட புத்தூர் மீன் மார்க்கெட்டில் 8 கடைகள் ஒப்பந்தம் முடிந்தும் மாநகராட்சியால் ஏலம் விடப்படாமல் காலியாக இருந்தது. இந்தநிலையில் நேற்று கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் பிரபாகரன் மேற்பார்வையில் 8 கடைகளும் ஏலம் விடப்பட்டது.

Next Story