கூடலூரில், தொடர் விபத்துகளால் வாகன போக்குவரத்து பாதிப்பு


கூடலூரில், தொடர் விபத்துகளால் வாகன போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 May 2020 10:00 PM GMT (Updated: 2020-05-09T09:24:33+05:30)

கூடலூரில் தொடர் விபத்துகளால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் அதன் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி கூடலூரில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப தொடர் விபத்துகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை 11½ மணிக்கு கூடலூர் பெட்ரோல் பங்க் எதிரே சாலையோரம் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. மேலும் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. அப்போது மைசூரூவில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கேரளா நோக்கி கூடலூர் வழியாக லாரி ஒன்று வந்தது.

கூடலூர் பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் மீது லாரியின் பின்பக்க டயர்கள் உரசின. உடனே லாரியை டிரைவர் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, காருக்குள் இருந்த பெண் உள்பட 4 பேர் உயிர் தப்பினர். எனினும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

இதேபோன்று கூடலூர் இரும்பு பாலத்தில் இருந்து கூடலூர் நோக்கி வந்த நகராட்சி லாரியானது கோழிப்பாலம் பகுதியில் எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கூடலூர் பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story