தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒரு ஆண்டு கால பணி நீட்டிப்பை ரத்து செய்ய கோரிக்கை


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒரு ஆண்டு கால பணி நீட்டிப்பை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2020 4:09 AM GMT (Updated: 2020-05-09T09:39:08+05:30)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஒரு ஆண்டுகால பணிநீட்டிப்பை ரத்து செய்யக்கோரி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பேரூராட்சி அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில நிர்வாகி பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்து ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணிஓய்வு வயதை 59 வயதாக ஒரு ஆண்டு நீட்டிக்கும் அரசின் ஆணை படித்த லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலாகும். இந்த அரசாணை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வையும் பாதிக்கும். எனவே இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

கோஷங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சூழலில் மத்திய அரசிடம் நிவாரண நிதியை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும். சரண்டர் விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம், ஜி.பி.எப். வட்டி குறைப்பு ஆகிய அரசு ஊழியர்களை பாதிக்கும் நடவடிக்கைளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் பாலக்கோட்டில் மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் தலைமையிலும், அரூரில் மாவட்ட துணை செயலாளர் இளவேனில் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் மாநில நிர்வாகி அண்ணாகுபேரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரிமங்கலத்தில் மாவட்ட இணை செயலாளர் நாகராணி தலைமையிலும், பென்னாகரத்தில் மாவட்ட துணை செயலாளர் தலைமையிலும் நல்லம்பள்ளியில் சங்க மாவட்ட நிர்வாகி காவேரி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மஞ்சுளா, பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க வட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, டி.ஏ. முடக்கத்தையும், சரண்டர் நிறுத்தத்தையும் கைவிட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை (ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியது) கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி வட்ட நெடுஞ்சாலை, கால்நடை, கூட்டுறவு, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி நன்றி கூறினார். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story