கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2020 4:20 AM GMT (Updated: 9 May 2020 4:20 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக சென்னை மாநகரம் நீங்கலாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 7-ந் தேதி (நேற்று முன்தினம்) முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தவிர கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 119 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி டாஸ்மாக் குடோனில் இருந்து மது வகைகள் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

ரூ.6 கோடிக்கு மது விற்பனை

அதைத் தொடர்ந்து அனைத்து கடைகள் முன்பும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் மதுபான வகைகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 8 மணி முதலே மதுக்கடைகளின் முன்பு மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றார்கள். காலை 10 மணிக்கு மது விற்பனை தொடங்கியது.

முதலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், பிறகு 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களும், கடைசியாக 40 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு மது வகைகள் வழங்கப்பட்டன. மது கடைகள் திறந்ததால் மது பிரியர்கள் மகிழ்ச்சியில் நீண்ட நேரம் நின்று மது வகைகளை பெற்று சென்றார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.6 கோடிக்கு மது வகைகள் விற்பனை ஆனது. மது வகைகள் 8,800 பெட்டிகளும், பீர் 2,200 பெட்டிகளும் விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story