தோகைமலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா அதிகாரிகள் பேச்சுவார்த்தை


தோகைமலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 9 May 2020 4:20 AM GMT (Updated: 9 May 2020 4:20 AM GMT)

தோகைமலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தோகைமலை, 

தோகைமலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் தர்ணா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி கிழக்கு ஆதிதிராவிடர் தெருவை ஒட்டி டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை செயல்படக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதேபோல் காவல்காரன்பட்டியில் உள்ள டாஸ்மாக்கடையும் திறக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்குவதற்காக வந்து சென்றனர்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சத்தில் உள்ள இப்பகுதியினர், தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மதுப்பிரியர்கள் முககவசம் அணியாமல் வந்து செல்வதால், தங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கள் தெருவழியாக டாஸ்மாக் கடைக்கு செல்லக்கூடாது என்றும், டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும், அந்த வழியாக யாரும் செல்ல முடியாத வகையில் அடைத்து வைத்து, அப்பகுதி பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக தெருவழியாக வரும் மதுப்பிரியர்களை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படும், ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ்மாக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story