தமிழகத்தை பாதிக்கும் எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி


தமிழகத்தை பாதிக்கும் எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 9 May 2020 4:36 AM GMT (Updated: 2020-05-09T10:06:29+05:30)

தமிழகத்தை பாதிக்கும் எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேட்டி

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 பேர் காயமடைந்துள்ளனர். அதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய 210 மெகாவாட் மின்சாரம் தடைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது தமிழகத்தில் தேவையான மின்சாரம் இருப்பதால், அந்த தடையால் எந்த பிரச்சினையும் இல்லை.

மேலும் தமிழகத்தில் மின்உற்பத்தி செய்யாமல் இருக்கும் அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தியை தொடங்க அறிவுறுத்தி உள்ளோம். நெய்வேலி அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளது. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் நிறுவனம். இன்னும் எவ்வளவு நாட்கள் அந்த பணிகள் நடைபெறும் என்பது தெரியவில்லை.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் மின்சார திருத்தச்சட்டம் குறித்து தமிழக அரசு சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதைபோல தமிழகத்தை பாதிக்கும் வகையில் உள்ள எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் திருத்தங்கள் வேண்டும் என நாங்கள் கூறி உள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் குரல் கொடுத்து தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தருவோம்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஊர்காவல் படையினர்

இதற்கிடையே நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் ஊர்காவல் படையினருக்கு அரிசி, பருப்பு மற்றும் கோதுமை அடங்கிய உணவு தொகுப்பை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் வழங்கினர். ஊர்காவல் படையினர் 267 பேருக்கும் இந்த தொகுப்பு வழங்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story