ஓமலூர் அருகே பயங்கரம் இருதரப்பினர் மோதலில் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு


ஓமலூர் அருகே பயங்கரம் இருதரப்பினர் மோதலில் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 9 May 2020 4:53 AM GMT (Updated: 9 May 2020 4:53 AM GMT)

ஓமலூர் அருகே இருதப்பினர் மோதலில் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள், குமரச்சிகரடு என்ற வனப்பகுதிக்கு நேற்று மதியம் மது குடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு மதுகுடித்து விட்டு போதையில் 2 மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒரு வாலிபர் கையில் குச்சியுடன் வந்துள்ளார்.

தொப்பளான்காடு பகுதியில் வந்த அவர்கள் சாலையோரம் இருந்த சிலரிடம் குடிபோதையில் தகராறு செய்தனர். பின்னர் நாலுகால் பாலம் சக்தி மாரியம்மன் கோவில் அருகேயும் சிலரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் புதுக்கடை காலனி பகுதியில் வந்த போது, சாலையோரம் நின்றிருந்த இளைஞர்கள் மீது, ஒருவர் கொண்டு வந்த குச்சி பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்கும், புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடிபோதையில் வந்த 2 பேரை பிடித்து வைத்தனர். மற்றவர்கள் தப்பி ஓடினார்கள்.

இருதரப்பினர் மோதல்

இதைத்தொடர்ந்து தப்பி ஓடியவர்கள் பொட்டியபுரம் ஊருக்குள் சென்று நடந்ததை கூறினார்கள். உடனே அவர்களில் சிலர் புதுக்கடை காலனிக்கு வந்து, 2 பேரை பிடித்து வைத்தவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு அவர்கள், பிடித்து வைத்தவர்களை போலீசாரிடம் தான் ஒப்படைப்போம், விடுவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதையறிந்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் உருட்டுக்கட்டைகள், கத்திகள் போன்ற ஆயுதங்களுடன் புதுக்கடை காலனிக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்கவே புதுக்கடை காலனியை சேர்ந்த விஷ்ணுபிரியன் (வயது 28), அவரது தம்பி நவீன் (26) ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் சிலர் உருட்டுக்கட்டையால் அடித்ததுடன், கத்தியாலும் குத்தினார்கள். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

சாவு

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணுபிரியன் பரிதாபமாக உயிரிழந்தார். நவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், துணை சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக பொட்டியபுரம் பகுதியில் உள்ள புதர்காட்டில், புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதை பொட்டியுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுமாப்பிள்ளை

இறந்த விஷ்ணு பிரியன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். அவருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. இருதரப்பினர் மோதலில் புதுமாப்பிள்ளை கொல்லப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story