டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது: 7 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது: 7 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x
தினத்தந்தி 9 May 2020 5:03 AM GMT (Updated: 2020-05-09T10:33:05+05:30)

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது. 7 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது. 7 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

டாஸ்மாக் கடைகள்

கொரோனா வைரசின் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினத்தை தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் குடையுடன் சமூக இடைவெளியை கடைப் பிடித்து மதுபானங்களை வாங்கி சென்றனர். சிலர் குடை இல்லாமல் வந்திருந்ததை காணமுடிந்தது. புத்தாம்பூரில் கொளுத்தும் வெயிலில் மதுவாங்க மதுப்பிரியர்கள் வரிசையில் காத்திருந்தனர். போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

மாவட்டத்தில் நேற்று முன்தினம் விற்பனையான மதுபானங்கள் விவரம் குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 125 கடைகளில் மட்டும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ரூ.5 கோடியே 6 லட்சத்து 62 ஆயிரத்து 400-க்கு மதுபானங்கள் விற்பனையானது. மாவட்டத்தில் வழக்கமான நேரங்களில் முன்பு ஒரு நாளைக்கு ரூ.1½ கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனையாகும். கடைகளில் விற்பனைக்கு தேவையான மதுபானங்கள் உள்ளன” என்றனர். 7 மணி நேரத்தில் நடந்த இந்த மதுபானங்கள் விற்பனை தொகை வழக்கமானதை விட இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் எவ்வளவு டோக்கன் கொடுத்து மதுபானங்கள் விற்பனை நடந்தது என அதிகாரியிடம் கேட்ட போது அந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Next Story