சேலத்தில் கணவன், மனைவி, சிறுவன் கொலை: வடமாநில வாலிபர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் கணவன், மனைவி, சிறுவன் கொலை: வடமாநில வாலிபர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 May 2020 5:29 AM GMT (Updated: 9 May 2020 5:29 AM GMT)

சேலத்தில் கணவன், மனைவி, சிறுவன் கொலை வழக்கில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அந்த பகுதியில் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இதில் உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ், இவரது மனைவி வந்தனகுமாரி இவர்களது உறவினர் சன்னிக்குமார் ஆகிய 3 பேர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினர்கள் வினோத் (வயது 30), அஜய்குஷ்வா (26), சூரஜ் (25) ஆகிய 3 பேர் அதே வெள்ளிப்பட்டறையில் சில நாட்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து வெள்ளிப்பட்டறை அதிபர் தங்கராஜை கொலை செய்து விட்டு பட்டறையில் இருந்து வெள்ளியை கொள்ளையடித்து செல்வதற்கான திட்டம் தீட்டி உள்ளனர். இவர்களது திட்டத்தை தெரிந்து கொண்ட ஆகாஷ், வந்தனகுமாரி, சிறுவன் சன்னிக்குமார் ஆகிய 3 பேர் கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி படுகொலை செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சேலம் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், அஜய்குஷ்வா, சூரஜ் ஆகிய 3 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை கொடூரமாகவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை பரிந்துரை செய்தார்.

இந்த கொலை வழக்கில் வடமாநில வாலிபர்கள் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையொட்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, சேலம் மத்திய சிறையில் உள்ள வினோத், அஜய்குஷ்வா, சூரஜ் ஆகிய 3 பேரிடம் போலீசார் வழங்கினர்.

Next Story