மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு: விவசாயி கத்தியால் குத்தி கொலை - மைத்துனர் கைது + "||" + Brewery dispute: Farmer killed with a knife - Brother-in-law arrested

மதுபோதையில் தகராறு: விவசாயி கத்தியால் குத்தி கொலை - மைத்துனர் கைது

மதுபோதையில் தகராறு: விவசாயி கத்தியால் குத்தி கொலை - மைத்துனர் கைது
ஆண்டிப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி விவசாயியை கொலை செய்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரத்தை சேர்ந்த சிவனாண்டிதேவர் மகன் குணசேகரன் (வயது 45). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த போஸ் மகன் பாண்டி (35). இவர் குணசேகரனின் மைத்துனர் ஆவார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கே.காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்துக்கொண்டிருந்தனர். மதுபோதை தலைக்கேறியதும் குணசேகரனும், பாண்டியும் ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணசேகரனை சரமாரியாக குத்தினார். வலியால் அலறித்துடித்த குணசேகரன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதற்கிடையே அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் பாண்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசேகரனை பொதுமக்கள் மீட்டு ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் வழியிலேயே குணசேகரன் இறந்தது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியை கைது செய்தனர். விவசாயியை மைத்துனரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.