பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தல்: 240 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது


பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தல்: 240 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2020 2:31 PM IST (Updated: 9 May 2020 2:31 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வந்த 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார், மணிக்கூண்டு அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வேனில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து வேனில் வந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கோவை கணபதிதெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 45), கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜூபி (40) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்த பாஸ்கர், ஜூபியை கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த 240 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவர்கள் 2 பேரும், புகையிலை பொருட்களை திண்டுக்கல்லில் யாருக்காவது விற்பனை செய்ய கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story