இந்தியன் வங்கி சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1½ கோடி சிறப்பு கடனுதவி - கலெக்டர் வழங்கினார்
இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 63 லட்சம் சிறப்பு கடனுதவியை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை,
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 240 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் ரூ.1 கோடியே 63 லட்சம் சிறப்பு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்தியன் வங்கி திருவண்ணாமலை மண்டல மேலாளர் ராஜாராமன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி கடனுதவியை வழங்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 3,278 சுய உதவி குழு உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.
தொடர்ந்து மண்டல மேலாளர் ராஜாராமன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் இயங்கி வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகளின் மூலம் சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஒவ்வொரு சுய உதவி குழுவிற்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கடன் பெற்ற 6 மாதங்களுக்குப் பிறகு 30 மாதத் தவணைகளில் கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும்.
இந்த இக்கட்டான கொரோனா பாதிப்பு சமயத்தில் சுய உதவி குழுக்கள் இந்தக் கடனுதவியை தங்கள் வாழ்வாதாரத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் சமூக விலகலைக் கடைபிடித்து இந்தியன் வங்கியின் 10 சுய உதவி குழுக்களுக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் சிறப்பு கடனுதவிக்கான கடன் அட்டைகள் மாவட்ட கலெக்டரால் குழு உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 184 சுய உதவி குழு உறுப்பினர்கள் பயன்பெற்றனர். இதுவரை இந்தியன் வங்கியின் மூலம் கொரோனா அவசர கால சிறப்பு கடனுதவியாக 29 குறு, சிறு தொழில்முனைவோர்களுக்கு ரூ.55 லட்சத்து 34 லட்சம் சிறப்பு கடன் மற்றும் 30 பேருக்கு ரூ. 41 லட்சத்து 85 ஆயிரம் தனிநபர் சிறப்பு கடன்கள் என மொத்தம் ரூ.2 கோடியே 61 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, வங்கி மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story