சிவகிரி அருகே, நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 2 பேர் கைது - ரூ.2 லட்சம் அபராதம்


சிவகிரி அருகே, நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 2 பேர் கைது - ரூ.2 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 9 May 2020 10:30 PM GMT (Updated: 9 May 2020 7:06 PM GMT)

சிவகிரி அருகே நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்து, ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

சிவகிரி, 

தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள வனச்சரகங்களில் மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் உத்தரவுப்படி சிவகிரி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகன் மற்றும் வனப்பணியாளர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோர் தேவியார் பீட் அருகில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான நெடுங்குளம் பரம்பு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர்.

2 பேரை பிடித்தனர்

அப்போது தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் கருப்பசாமி (வயது 30), ஜெயசந்திராபுரம் சாமி (47) ஆகிய இருவரும் தேவிபட்டணம் செங்குளம் கண்மாய்க்கு மேற்கே வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து மற்றும் தோட்டா தயாரிக்க பயன்படும் மூலதன பொருட்கள், வேட்டையாட பயன்படும் ஒலி எழுப்பான் கருவி, டார்ச்லைட் ஆகியவற்றுடன் வந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து சிவகிரி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அபராதம்

பின்னர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கருப்பசாமி, சாமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் வேட்டையாடுவதற்காக கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேட்டையாடுவதற்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து மற்றும் தோட்டா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலதன பொருட்கள், டார்ச்லைட் மற்றும் இதர பொருட்களையும் வனத்துறையினர் கைப்பற்றினர்.

Next Story