டாஸ்மாக்கிற்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் அரசியல் நாடகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
டாஸ்மாக்கிற்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் அரசியலுக்காக நடத்தப்பட்ட நாடகம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி,
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையிலும் 5 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், முதலில் 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மற்ற 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
தொடர்ந்து 15 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. பின்னர் ஊரடங்கு சற்று தளர்வு செய்யப்பட்டவுடன் வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களில் 2 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்காணிப்பு
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சென்னையில் இருந்து வருபவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர். இதற்காக மாவட்ட எல்லைகள் மற்றும் குறுக்கு சாலைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் கொரோனா தொற்று பரவுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து முறையான அனுமதியின்றி வந்தவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் நாடகம்
டாஸ்மாக் கடைகள் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிகள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களுக்கு சொந்தமாக ஏராளமான மதுபான ஆலைகள் உள்ளன என்பது நாடறிந்த உண்மை. அவற்றை முதலில் மூட வேண்டும் என்பதற்கு அவர்கள்தான் பதில் கூற வேண்டும்.
ஆனால், தற்போது அவர்களே மக்களை ஏமாற்றுவதற்காக, கருப்பு சட்டை அணிந்து போராடி விளம்பரம் தேடுகிறார்கள். அவர்களால் தங்களது தொண்டர்களை டாஸ்மாக் கடைகளுக்கு செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்க முடிந்ததா? அல்லது கட்டுப்படுத்த முடிந்ததா?. இது அரசியலுக்காக நடத்தப்பட்ட நாடகம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story