ஆதரவற்றோர் முகாமில் இருந்த 40 பேருக்கு வேலை வாய்ப்பு தொழில் உபகரணம் வழங்கப்பட்டது


ஆதரவற்றோர் முகாமில் இருந்த 40 பேருக்கு வேலை வாய்ப்பு தொழில் உபகரணம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 9 May 2020 10:30 PM GMT (Updated: 9 May 2020 8:10 PM GMT)

கொரோனா ஊரடங்கில் ஆதரவற்றோர் முகாமில் இருந்த 40 பேருக்கு வேலை வாய்ப்புக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு, 

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீடுகள் இருப்பவர்கள் வீட்டுக்குள் இருப்பார்கள். வீடுகளே இல்லாமல் வீதியில் தங்கி இருப்பவர்களின் நிலை என்ன என்று அரசு சிந்திக்கும் முன்பே, முன்னோடியாக ஈரோட்டை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பினர் தங்கள் பணியை தொடங்கினார்கள்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் அனுமதியை பெற்று ஆதரவற்றவர்களை கவனிக்கும் பொறுப்பு அட்சயம் அறக்கட்டளை, தாய்மை அறக்கட்டளை, ஜீவிதம் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. இப்படி பொறுப்பு வழங்கியதுடன் நிற்காமல் மாநகராட்சி பள்ளிக்கூடங்களும் ஒதுக்கப்பட்டன.

ஈரோடு காவேரிரோடு பள்ளிக்கூடம், காளைமாடு சிலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடம், வீரப்பம்பாளையம் பள்ளிக்கூடம், திண்டல் பள்ளிக்கூடம் என 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் இந்த பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த முகாம்களின் பொறுப்பாளர்கள் தினசரி உணவு மட்டுமின்றி, வாழ்க்கையில் நொடிந்து போய் இருந்த ஆதரவற்ற மக்களுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல நல்ல விஷயங்களையும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு காளைமாட்டு சிலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 77 பேரை பாதுகாக்கும் பொறுப்பு அட்சயம் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி நவீன்குமார் தலைமையில் இளைஞர்கள் முகாம் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொருவரிடமும் பேசி, அவர்களின் நம்பிக்கையை வளர்த்தனர். இதன் மூலம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஒவ்வொருவரும் வீதிகளை விட்டு சக மனிதர்களைப்போல நல்ல முறையில் வாழும் முடிவை எடுத்து உள்ளனர். இதனால் 77 பேரில் 31 பேர் தவிர்த்து மற்ற அனைவரும் தாங்கள் விட்டு வந்த பணி, குடும்பம் ஆகியவற்றை தேடிச்செல்வதாக கூறி உள்ளனர். 31 பேர் வேறு வேலை கிடைத்தால் அதை செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுபோல் வீரப்பம்பாளையம் பள்ளிக்கூடத்தில் தங்கி இருந்த 9 பேரும் ஏதேனும் வேலை தந்தால் செய்வதாக உறுதி அளித்தனர். அதன்படி இந்த 40 பேருக்கும் வேலை தேடும் பணியை அட்சயம் அறக்கட்டளை நிர்வாகி நவீன்குமார் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலர் தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்தனர். 6 பேர் சுய தொழில் தொடங்க விரும்புவதாக கூறினார்கள். அவர்களுக்கு தள்ளுவண்டி, சைக்கிள் மற்றும் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற விரும்பம் தெரிவித்தவர்களுக்கு பணி நியமன உத்தரவு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி காளைமாடு சிலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, தொழில் உபகரணங்கள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார், எஸ்கேஎம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எஸ்கேஎம்.ஸ்ரீசிவ்குமார், சுதா பல்துறை ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Next Story