ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை: கடைகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனையானது. நேற்று கடைகள் திறக்காததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஈரோடு,
தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகள் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து மது விற்பனை நடந்தது. அனைத்து பகுதிகளிலும் குடிமகன்கள் உற்சாகமாக வந்து மது வாங்கிச்சென்றனர். 40 நாட்களுக்கும் மேலாக மதுக்குடிக்காமல் வீடுகளில் இருந்த தொழிலாளர்கள், தங்களிடம் இருந்த கொஞ்சம் பணத்தையும் கொண்டு சென்று டாஸ்மாக் மதுக்கடைகளில் கொடுத்து மதுவாங்கி குடித்தனர்.
பல வீடுகளிலும் ஊரடங்கின்போது அடங்கிக்கிடந்த குடிமகன்கள் மதுக்குடித்து விட்டு தங்கள் அட்டகாசத்தை தொடங்கினார்கள். இதற்கிடையே மதுக்கடை திறப்புக்கு பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 370-க்கு மது விற்பனையாகி இருந்தது. 2-வது நாளில் இது சற்று குறைந்தது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் 143 கடைகளிலும் சேர்த்து ரூ.5 கோடியே 49 லட்சத்து 42 ஆயிரத்து 740-க்கு மது விற்பனையாகி உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவின் படி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து டாஸ்மாக் ஈரோடு மாவட்ட மேலாளர் இளங்கோ கூறும்போது, “கடை திறக்கப்பட்ட 2 நாட்களும் நமது சராசரி விற்பனையை விட மிக அதிகமாக விற்பனை ஆகி இருக்கிறது. தற்போது கடைகளில் தேவையான அளவு மதுபானங்கள் இருப்பு உள்ளன. எனவே கடைகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கதவுகளுக்கு இரும்பு கம்பிகள் பொருத்தி, வெல்டிங் செய்யப்பட்டு உள்ளது”, என்றார்.
மாவட்ட மேலாளர் இளங்கோ மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கும் நேரில் சென்று கடைகளுக்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story