திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது


திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 10 May 2020 5:00 AM IST (Updated: 10 May 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது. இதன் மூலம் ஒரே நாளில் கொரோனா தொற்று தொடர்பான முடிவை தெரிந்துகொள்ளலாம்.

திருப்பூர், 

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் (ஆர்.டி.பி.சி.ஆர்.) இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வரைமுறைகளின்படி புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மையம் இயங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ளது. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கு குறிப்பிட்ட சில நாட்கள் ஆனது. இந்த நிலையில் கொரோனா தொற்றை உடனே கண்டறியும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது:-

கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய சளி மாதிரி எடுக்கப்பட்டு கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் அனுப்பி கண்டறியப்பட்டு வந்தது. இதனால் கொரோனா தொற்றை கண்டறிவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது உள்ள சூழலில் தொற்றை கட்டுப்படுத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டறிவது அவசியமாகும். இதற்காக நவீன கொரோனா பரிசோதனை மையம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு நேற்று முதல் இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த பரிசோதனை மையம் மூலம் ஒரே நாளில் கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். முதல் நாளான நேற்று 10 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஒரு நாளில் 50 முதல் 100 பேர் வரை இங்கு பரிசோதனை செய்ய முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.

Next Story