திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.11¾ கோடிக்கு மது விற்பனை: கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.11¾ கோடிக்கு மது விற்பனை: கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 10 May 2020 3:08 AM IST (Updated: 10 May 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.11¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் டாஸ்மாக் கடைகளை மூடி சீல்வைத்தனர்.

திருவண்ணாமலை, 

கெரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 215 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் 7-ந் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்தது.

அதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கெரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தவிர்த்து மீதமுள்ள பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமானதால் மேலும் சில கடைகள் மூடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 மற்றும் 8-ந் தேதி என 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை டாஸ்மாக் கடைகள் மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் மூலம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக ஒரு நாளைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 215 டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.2½ கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை மதுபானம் விற்பனையாகும். சுமார் 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் முதல்நாளான 7-ந் தேதி 157 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அதன் மூலம் ரூ.6 கோடியே 50 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. 2-வது நாளான 8-ந் தேதி 123 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அதன் மூலம் ரூ.5 கோடியே 25 லட்சத்திற்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. ஆக மொத்தம் 2 நாட்களில் ரூ.11 கோடியே 75 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story