கொதிகலன் வெடித்து விபத்து: என்.எல்.சி. அதிகாரியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு


கொதிகலன் வெடித்து விபத்து: என்.எல்.சி. அதிகாரியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு
x
தினத்தந்தி 9 May 2020 9:52 PM GMT (Updated: 9 May 2020 9:52 PM GMT)

கொதிகலன் வெடித்து விபத்து: என்.எல்.சி. அதிகாரியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 6-வது உற்பத்தி பிரிவில் உயர் அழுத்தம் காரணமாக 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் காயமடைந்து, திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சர்புதீன் என்பவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கொல்லிருப்பு வெங்கடேசன், முதனை செல்வராசு, கூனங்குறிச்சி ஜான்லியோ, பெரிய காப்பான்குளம் தமிழ்செல்வி, அம்மேரி ஒன்றிய கவுன்சிலர் சக்கரவர்த்தி ஆகியோர் என்.எல்.சி. நிறுவன தலைவர் ராகேஷ் குமார், மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு நிரந்தர வேலை மற்றும் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்குதல், விபத்தின் போது பணியில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனல் மின்நிலையத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நெய்வேலியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது அம்மேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜெயசித்ரா, பெரிய காப்பான் குளம் ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், முதனை ஒன்றிய கவுன்சிலர் தமிழரசன், முதனை தங்க ஆனந்தன், தி.மு.க. மாவட்ட துணை தலைவர் ஞானமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிலம்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story