ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை: நெல்லையில் மதுக்கடைகளுக்கு ‘சீல்’
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெல்லையில் மதுக்கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் கடையை திறக்க முடியாதபடி ‘வெல்டிங்‘கும் வைக்கப்பட்டது.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 165 கடைகளும் மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்த பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 40 நாட்களுக்கும் மேல் மது கிடைக்காமல் தவித்து வந்த மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். நேற்று முன்தினம் 2-வது நாளிலும் மதுக்கடைகளில் வியாபாரம் களை கட்டியது. நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை ஆனது.
இந்த நிலையில் மதுக்கடை திறப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலையுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி மதுக்கடைகளின் கதவுகளை திறக்க முடியாதபடி வெல்டிங் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளின் பூட்டுகளில் ‘சீல்‘ வைத்து, கதவுகளில் வெல்டிங் வைக்கும் பணியும் நடந்தது.
அனைத்து கடைகளிலும் மதுப்பிரியர்களை வரிசைப்படுத்தும் வகையில் அறிவிப்புகள், எச்சரிக்கை செய்ய வசதியாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஒலிபெருக்கியுடன் இணைக்கப்பட்டிருந்த ஆம்பிளிபயர், மைக் உள்ளிட்டவை மதுக்கடை உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதனை அந்தந்த பகுதி ஒலிபெருக்கி ஊழியர்கள் வந்து அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துச் சென்றனர்.
அதன்பிறகு கடைகளை பூட்டி, பூட்டுகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதையடுத்து இரும்பு ஷட்டர் கதவுகளையும், அதனுடன் உள்ள இரும்பு நிலைக்காலிலும் ‘வெல்டிங்‘ வைத்து இணைக்கப்பட்டது.
இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் 96 கடைகளிலும், தென்காசி மாவட்டத்தில் 69 கடைகளிலும் நேற்று கதவுகளில் ‘வெல்டிங்‘ வைத்து பூட்டப்பட்டது.
ஒருசில இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு ஊழியர்கள் வந்து நின்றதை பார்த்த மதுப்பிரியர்கள், கடையை மீண்டும் திறக்கப்போகிறார்கள் என கருதி, மது கிடைக்குமா? என்று கேட்டனர். ஆனால், கடையை பூட்டி ‘வெல்டிங்‘ வைக்கும் பணி நடைபெறுவதை அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story