பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை: மீன்பிடி தொழில் முடங்கியதால் வறுமையில் வாடி வரும் மீனவர்கள்
கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தொழில் முடங்கியதால் அங்குள்ள கிராம மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரி கரையில் அமைந் துள்ள அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இங்குள்ள ஏரியில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் இறால், மடவை, துள்ளு உட்பட பல்வேறு ரக மீன்களை வெளிமாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.
இவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் முடங்கி உள்ளதால், இங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும் இங்குள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 200-க்கும் மேற்பட்ட படகுகள் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வரும் மீனவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story