சென்னையில் 87 ஆண்டுகள் பழமையான யானைக்கவுனி மேம்பாலம் இடித்து அகற்றம்


சென்னையில் 87 ஆண்டுகள் பழமையான யானைக்கவுனி மேம்பாலம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 10 May 2020 3:45 AM IST (Updated: 10 May 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தை பயன்படுத்தி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள 87 ஆண்டுகள் பழமையான யானைக்கவுனி மேம்பாலம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

சென்னை, 

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கடந்த 1933-ம் ஆண்டு கட்டப்பட்ட யானைக்கவுனி மேம்பாலம், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதனை பயன்படுத்தி வெற்றிகரமாக இடிக்கும் பணி நிறைவேற்றப்பட்டது. இந்த மேம்பாலத்திற்கு அடியில் 8 தண்டவாளங்கள் செல்கின்றன. சென்னை சென்டிரல் பணிமனையின் விரிவாக்கப் பணிகள், சென்டிரல் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால் இந்த பாலத்தை சீரமைத்து அகலப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

மிகவும் பாழடைந்த இந்த மேம்பாலத்தை, முதலில் 72 மணி நேரத்துக்கும் மேலான நேரத்தை ஒதுக்கி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் சேவைகளை நிறுத்தி இடிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இடிக்கும் பணி

இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இதனால் ரெயில் சேவை மார்ச் மாதத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், அதனை பயன்படுத்தி தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டம் கட்டுமான துறை, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு 87 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை இடிக்கும் பணி துரிதமாக மேற்கொண்டு முடிக்கப்பட்டது.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம், பாழடைந்த யானைக்கவுனி பாலத்தை அகற்றும் பணியை மேற்கொண்டதன் மூலம் ரெயில் போக்குவரத்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த பாலம் இடிக்கும் பணிகள் மூலம், புதிய அகலமான பாலம் அமைத்து, பல விரிவாக்க பணிகளுக்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த யானைக்கவுனி மேம்பாலத்தை கடந்த 2008-09-ம் ஆண்டு 43.77 கோடி ரூபாய் செலவில், மறுசீரமைக்கும் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, ‘பிங்க்’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story