எலவனாசூர்கோட்டை அருகே தறிகெட்டு ஓடிய மினிலாரி கவிழ்ந்து பெண் பலி 36 பேர் படுகாயம்


எலவனாசூர்கோட்டை அருகே தறிகெட்டு ஓடிய மினிலாரி கவிழ்ந்து பெண் பலி 36 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 May 2020 10:24 PM GMT (Updated: 9 May 2020 10:24 PM GMT)

எலவனாசூர்கோட்டை அருகே டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடிய மினிலாரி கவிழ்ந்ததில் பெண் பலியானார். மேலும் இந்த விபத்தில் 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் வேலைக்காக நேற்று காலை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் மன்னார்குடிக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் ஒரு மினிலாரியில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். எலவனாசூர்கோட்டை அடுத்த செம்பியன்மாதேவி என்ற இடத்தில் வந்தபோது மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினிலாரியில் வந்த முடியனூரை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலி (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

மேலும் அதே பகுதியை சேர்ந்த முத்துக்கண்ணு(40), பூசைமணி(49), நல்லம்மாள்(45), சுகன்யா(25), அலமேலு(32), விஜயா(22), கண்ணன்(38), லட்சுமி(42), வெண்ணிலா(32), கஸ்தூரி(25), செல்வி(25), நாராயணசாமி(40), பச்சையம்மாள்(36) உள்பட 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த 36 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 20 பேர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விபத்தில் பலியான அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மினி லாரியில் சென்றது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story