ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நேற்று) புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக பாதிப்பு ஏற்படுள்ள 10 பேரில் 7 பேர் நேரடியாக கோயம்பேடு சென்று வந்தவர்கள், 3 பேர் கோயம்பேடு சென்று வந்தவர்களின் தொடர்பு மூலமாக பாதிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டுள்ள 10 பேரில் 9 பேர் ஆண்கள், ஒருவர் பெண்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோயம்பேடுக்கு சென்று வந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் மொத்தம் 199 பேர். இவர்களில் 10 பேருக்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 95 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
வாலாஜாவில் இருந்து கோயம்பேடுக்கு லாரி மூலம் சென்று வந்தவருக்கு தான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாலாஜா தொடர்ந்து கட்டுப்பாட்டுப் பகுதியாக நீடிக்கும். ஏற்கனவே உள்ளது போல் அத்தியாவசிய பொருட்களை டெலிவரி மீ என்ற செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்தில் 12 பேர் மட்டுமே முகாமில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் இரண்டு பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகள் தற்போது நல்ல நிலையில் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய முடியாது. அதை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம், கல்மேல்குப்பம், ஆற்காடு, பனப்பாக்கம், அம்மூர் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அரசின் விதிமுறைப்படி கடைகள் திறப்பது குறித்து நகராட்சி மற்றும் ஊராட்சிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளோம்.
ராணிப்பேட்டை பகுதியில் மொத்தம் 55 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகள் உரிய விதிமுறைகளுடன் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தாசில்தார்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு காரணமாக இருந்தால் தொழிற்சாலை மூடப்படும் என ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story