தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 1,867 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 1,867 பேருக்கு இதுவரை கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்தநிலையில் தற்போது டெல்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்களை தொடர்ந்து, கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கோயம்பேடு மார்கெட்டில் பணி புரிந்தவர்கள் மற்றும் அதனுடன் பல்வேறு வகையில் தொடர்பில் இருந்தவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் பணியில் உள்ளாட்சி துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்த 1,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சென்னையில் 735 பேரும், கடலூரில் 317, அரியலூரில் 239 பேரும், விழுப்புரத்தில் 177 பேரும், திருவள்ளூரில் 124 பேரும், பெரம்பலூரில் 59 பேரும், கள்ளக்குறிச்சியில் 45 பேரும், செங்கல்பட்டில் 39 பேரும், காஞ்சீபுரத்தில் 33 பேரும், திண்டுக்கலில் 24 பேரும், திருவண்ணாமலையில் 17 பேரும், திருச்சியில் 10 பேரும், தஞ்சாவூரில் 8 பேரும், வேலூரில் 6 பேரும், திருப்பத்தூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேரும், நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் தலா 4 பேரும், தர்மபுரி, தேனியும் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், திருப்பூரில் 2 பேரும், தூத்துக்குடி, திருவாரூர், தென்காசி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்தவர்கள் 26 மாவட்டங்களில் இருப்பது இதுவரை தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story