எம்.எல்.சி. ‘சீட்’ மறுக்கப்பட்டதால் வருத்தப்படவில்லை - பங்கஜா முண்டே கருத்து
பா.ஜனதா சார்பில் எம்.எல்.சி. ‘சீட்’ மறுக்கப்பட்டதால் தான் வருத்தப்படவில்லை என முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே டுவிட் செய்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் தற்போதைய மேல்சபை துணை தலைவர் நீலம் கோரே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இருப்பினும் சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே மற்றும் முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஏக்நாத் கட்சே அதிருப்தி
ஆனால் நேற்று முன்தினம் பாரதீய ஜனதா வெளியிட்ட 4 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் மேற்படி இரண்டு பேரின் பெயரும் இடம் பெறவில்லை. மாறாக புதிதாக 4 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தான் எம்.எல்.சி.யாக விரும்புவதாக தானாக முன் வந்து விருப்பத்தை தெரிவித்து இருந்த ஏக்நாத் கட்சேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் எம்.எல்.சி. ‘சீட்’ கொடுக்கப்படாததால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எம்.எல்.சி. தேர்தலில் கட்சியால் எனது பெயர் பரிந்துரைக்கப்படாததற்காக வருத்தப்படவில்லை. ஆதரவாளர்கள் யாரும் மனச்சோர்வடைய வேண்டாம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இருக்கிறோம். சாகேப்பின்(தந்தை கோபிநாத் முண்டே) ஆசீர்வாதம் அனைவருக்கும் உள்ளது.
உங்கள் வருத்தத்தை வெளிப்படுத்த என் தாயையும், சகோதரியையும் (பீட் எம்.பி. பிரித்தம் முண்டே) அழைத்தீர்கள். நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. எனவே நான் அழைப்புகளை எடுக்கவில்லை. கட்சி வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story