மும்பையில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் - போலீசாருக்கு மத்திய குழுவினர் உத்தரவு
மும்பையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என போலீசாருக்கு மத்திய குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.
மும்பை,
மும்பையில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இங்கு தொற்று பாதித்தவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மும்பையில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 2-வது குழுவை அமைத்தது.
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இயக்குனர் குனால்குமார் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வியாழக்கிழமை மும்பை தாராவி, என்.எஸ்.சி.ஐ. அரங்க தனிமை மையம், செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மத்திய குழுவினர் தாராவியில் மாநகராட்சியால் காய்ச்சல் கிளினிக்குகள் அமைக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
கடுமையான ஊரடங்கு
ஆய்வை முடித்த பிறகு மத்திய குழுவினர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தலைமை செயலாளர் அஜாய் மேத்தா ஆகியோரை சந்தித்து பேசினர். மேலும் மாநகராட்சி தலைமையகத்தில் இருந்து மாநகராட்சி மற்றும் போலீசாருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினர்.
அப்போது அவர்கள் மும்பையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும், பொதுமக்கள் வீதிகளில் நடமாட அனுமதிக்க கூடாது என போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story