கொரோனா டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்கிறோம்; 2-வது இன்னிங்ஸ் கடினமானது - கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கருத்து
கொரோனா டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்கிறோம். ஆனால் 2-வது இன்னிங்ஸ் கடினமானது என்று கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத் துறையினர், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களை கவுரவித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் மறைந்த கன்னட நடிகர் அம்பரீசின் மனைவியும், மண்டியா தொகுதி எம்.பி.யுமான சுமலதா அம்பரீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.
மேலும் கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும்படி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளேவுக்கும் கோரிக்கை விடுத்து சுமலதா அம்பரீஷ் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா டெஸ்ட் போட்டி
கொரோனா பாதிப்புக்கு மத்தியில், அந்த வைரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை கவுரவப்படுத்தும் படி எனக்கு வேண்டுகோள் விடுத்த சுமலதா எம்.பி.க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் போலீசாருக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். நீங்கள் தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக சேவையாற்றி வருகிறீர்கள். இந்த போரில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நமதே.
இந்த கொரோனா பாதிப்பு காலம் என்பது, டெஸ்ட் கிரிக்கெட் போல தான். தற்போது டெஸ்ட் போட்டி 5 நாட்கள் நடக்கும். ஆனால் கொரோனா நோய் நம்முடன் நீண்ட காலமாக இருந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ் உண்டு. அதுபோல் கொரோனா டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நாம் முன்னிலை வகிக்கிறோம். ஆனால் 2-வது இன்னிங்சில் நாம் முன்னிலை வகிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதையும் நாம் துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி எளிமையானது. எனவே கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
அரசின் வழிகாட்டுதல்கள்
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல், அறிவுரைகளை பின்பற்றி அடிக்கடி கிருமிநாசினியால் கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் கூடுதல் பொறுப்புடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டிய காலம் இது. அவ்வாறு நாம் செயல்பட்டால் கொரோனா வைரசை பார்த்து நாம் பயப்பட தேவையில்லை. கொரோனாவுக்கு எதிரான போராடி வரும் அனைவரும் அவர்களது குடும்பத்தை மறந்து எங்களுக்காக சேவையாற்றி வருகிறீர்கள். உங்களுடன் நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story