கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு இல்லை - மந்திரி சிவராம் ஹெப்பார் பேட்டி


கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு இல்லை - மந்திரி சிவராம் ஹெப்பார் பேட்டி
x
தினத்தந்தி 10 May 2020 5:22 AM IST (Updated: 10 May 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

“கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்று மந்திரி சிவராம் ஹெப்பார் கூறினார்.

பெங்களூரு, 

தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொழிலாளர்களுக்கு முதலில் வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு இல்லாதபோது, வேலை நேரத்தை அதிகப்படுத்தினால் என்ன செய்ய முடியும். வேலை நேரத்தை நீட்டிப்பதால், தொழிலாளர்களுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ எந்த பயனும் இல்லை. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

கர்நாடகத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் எண்ணம் இதுவரை அரசுக்கு இல்லை. இதுபற்றி அரசு அடுத்த வாரம் விவாதிக்க உள்ளது. அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட வேண்டும். இது தான் தற்போது எங்கள் முன் உள்ள முக்கியமான பணி. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதவி தொகுப்பு திட்டம்

எந்த காரணத்திற்காகவும் யாருக்கும் வேலை பறிபோகக்கூடாது. நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படாவிட்டால், வேலை வாய்ப்பு எப்படி கிடைக்கும். மாநில அரசு, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் செயல்படுகிறது. இந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு உதவி தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், அந்த நிறுவனங்கள் பெரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளன. அந்த நிறுவனங்கள் அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. மேலும் பெரு நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை அந்த நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன. பா.ஜனதா அரசு, தன்னால் என்ன முடியுமோ அந்த உதவிகளை அந்த தொழில் நிறுவனங்களுக்கு செய்கிறது.”

இவ்வாறு சிவராம் ஹெப்பார் கூறினார்.

Next Story