அடுத்த கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் சமச்சீர் பாடத்திட்டம் அமல் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
உயர்கல்வியை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பெங்களூருவில் இருந்தபடி அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் காணொலி காட்சி மூலம், அடுத்த கல்வி ஆண்டு மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இதில் அஸ்வத் நாராயண் பேசியதாவது:-
கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரிக்கு வந்து, ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணியில் ஈடுபட வேண்டும். தனியார் கல்லூரிகளும் இந்த நிலையை பின்பற்ற வேண்டும். வருகிற 30-ந் தேதிக்குள் நிலுவையில் உள்ள அனைத்து பாடங்களையும் கற்பித்தலை நிறைவு செய்ய வேண்டும். மராட்டியத்தை போல், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வை நடத்தி, முதல் மற்றும் 2-வது ஆண்டு மாணவர்களை தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி செய்யலாம் என்ற ஆலோசனை வந்துள்ளது.
சமச்சீர் பாடத்திட்டம்
இதுகுறித்து வருகிற 17-ந் தேதிக்கு பிறகு அனைத்து துணைவேந்தர்களுடன் மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் அனைத்து கல்லூரியில் சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்.
இந்த சமச்சீர் பாடத்திட்டம் குறித்து ஆராய 5 நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள செயல்படையின் ஆலோசனைபடி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்த பிறகு, பல்வேறு துறை நிபுணர்களுடன் ஆலோசித்து சமச்சீர் பாடத்திட்டம் உருவாக்கப்படும். இந்த பணிகள் துரிதகதியில் நடைபெற்றால் வருகிற கல்வி ஆண்டிலேயே இந்த சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.
நிபுணர் குழு
விடைத்தாள் மதிப்பீட்டில் சீர்திருத்தம் மேற்கொள்ள ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு அடுத்த ஓரிரு நாளில் அமைக்கப்படும். இந்த குழு 15 நாட்களில் அறிக்கை வழங்கும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.
இந்த கூட்டத்தில், உயர்கல்வி கவுன்சிலர் நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.கோரி, உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜ்குமார் கத்ரி, கல்லூரி கல்வி கமிஷனர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story