வலங்கைமானில் ரூ.55 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்


வலங்கைமானில் ரூ.55 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2020 5:30 AM IST (Updated: 10 May 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில் ரூ.55 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

வலங்கைமான், 

வலங்கைமானில் ரூ.55 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

வேளாண் எந்திரங்கள்

வலங்கைமான் உதவி வேளாண்மை அலுவலகத்தில் மானிய மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். தமிழக அரசின் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் கிராமப்புற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சிறு-குறு விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், எதிர்வரும் குறுவை சாகுபடியை தடையின்றி தொடரவும் ரூ.55 லட்சம் மானியத்தில் 3 டிராக்டர்கள், 27 பவர் டில்லர்கள் உள்பட வேளாண் எந்திரங்களை விவசாயிகளுக்கு அமைச்சர் காமராஜ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

100 விவசாயிகள்

கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் அவருக்கு இணையான ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். இந்த நேரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 100 விவசாயிகள் அடங்கிய ஒரு குழு என்ற வகையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இயக்குனர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மானியம் வழங்கப்பட்டு வேளாண் எந்திரங்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து குறுவை சாகுபடி முறைப்புடன் விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் நடப்பாண்டிற்கான பயனாளிகளாக 37 குழுக்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பில் 65 பவர் டில்லர்களும், ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் 16 டிராக்டர்களும், ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் ஒரு சமன்படுத்தும் எந்திரமும், ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் வைக்கோல் கட்டும் எந்திரமும் வழங்கப்பட உள்ளன.

நெல் கொள்முதல்

நடப்பாண்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இதுவரை 22 லட்சம் டன் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

விவசாயிகளுக்கு, விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 1,787 டன் யூரியா, 1,817 டன் டி.ஏ.பி., 1,305 டன் பொட்டாஷ், 1,007 டன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவைகள் கையிருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு மருத்துவ முகாம்

முன்னதாக ஆலங்குடியில் தூய்மை காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், வேளாண்துறை இணை இயக்குனர் சிவக்குமார் உதவி கலெக்டர் ஜெயப்பிரதா, உதவி இயக்குனர் சந்தானம், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், உஷாராணி, வேளாண் உதவி இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், ஹோமோ ஹெப்சிபா நிர்மலா, ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராகவி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story