எடியூரப்பாவின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - மந்திரி சுரேஷ்குமார் தகவல்


எடியூரப்பாவின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - மந்திரி சுரேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 10 May 2020 5:40 AM IST (Updated: 10 May 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பாவின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு, 

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடக அரசு, கொரோனாவை எதிர்த்து போரிட்டு வரும் பணியை இந்த நாடே உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கர்நாடகம் இன்று 13-வது இடத்தில் உள்ளது. நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா சவால்கள் மிக சிறப்பான முறையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆட்சி எந்திரம் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதற்கு ஊக்கம் அளிப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பாவின் செயல்பாடுகள் உள்ளது. முதல்-மந்திரியின் கிருஷ்ணா இல்லத்தில், எடியூரப்பா தினமும் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக வந்து ஆலோசனைகளை கூறுகிறார்கள்.

வளர்ச்சிக்கு புதிய திசை

தொழில் அதிபர்கள் வந்து தங்களின் உதவிகளை தெரிவிக்கிறார்கள். அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி திட்டங்களை வகுக்க எடியூரப்பா உத்தரவிடுகிறார். இதுவரை கண்டிராத நெருக்கடியான நேரத்தில், அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் எடியூரப்பா நிதி உதவி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.

தனது வயதையும் பொருட்படுத்தாமல் எடியூரப்பா மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையை காட்டியுள்ளார். நான் அவரிடம், உங்களால் எப்படி இவ்வளவு உத்வேகமாக பணியாற்ற முடிகிறது என்று கேட்டேன். அதற்கு எடியூரப்பா, கொரோனா என்பது ஒரு பெரிய சவால். இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பது எனது நோக்கம். மாநில மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக நாம் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் அல்லவா என்றார்.

கட்டுக்குள் உள்ளது

அரசின் செயல்பாடுகளை யாரும் கேள்வி கேட்காத அளவுக்கு எடியூரப்பா நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். எடியூரப்பாவின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்பு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் கட்டுக்குள் உள்ளது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story