நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 44 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்


நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 44 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 10 May 2020 6:12 AM IST (Updated: 10 May 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 44 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று கொரோனா வைரஸ் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 44 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று கொரோனா வைரஸ் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரசால் 46 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் 44 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பரிசோதனை கருவிகள்

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து இதுவரை 156 பேர் நாகை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாவட்ட எல்லைகளில் பரிசோதிக்கப்பட்டு, நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பரிசோதனை கருவிகள் நாகை மாவட்டத்திற்கு கிடைக்க பெற்றுள்ளன. அக்கருவிகள் மூலம் மாவட்டத்திலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் விரைவில் கிடைக்கப்பெறும். கொரோனா வைரசினால் விவசாயப்பணிகள் பாதிக்கப்படாத வகையிலும், கிராமப்புர பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

வாய்க்கால்கள் தூர்வாரப்படும்

விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வாய்க்கால் தூர்வாரப்படும் பணிகளை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் எந்தந்த வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என்ற பட்டியல்களை வாங்கி அதன் அடிப்படையில் தூர்வாரப்படும்.

நாகை மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்த வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக கேரளா மாநிலத்தை சேர்ந்த 15 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story