குமரியில் இருந்து மத்தியபிரதேசத்துக்கு தண்டவாளம் வழியாக செல்ல முயன்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் பேச்சுவார்த்தை


குமரியில் இருந்து மத்தியபிரதேசத்துக்கு தண்டவாளம் வழியாக செல்ல முயன்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 May 2020 6:49 AM IST (Updated: 10 May 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் இருந்து மத்தியபிரதேசத்துக்கு தண்டவாளம் வழியாக நடந்து செல்ல முயன்ற 14 தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழகியமண்டபம், 

குமரியில் இருந்து மத்தியபிரதேசத்துக்கு தண்டவாளம் வழியாக நடந்து செல்ல முயன்ற 14 தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வடமாநில தொழிலாளர்கள்

மத்திய பிரதேசம் மாநிலம் சிறுகுலி மாவட்டத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் குமரி மாவட்டம் கருங்கலுக்கு வேலைக்கு வந்தனர். இவர்கள் கருங்கலில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். மேலும், ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதால் சொந்த ஊருக்கும் செல்லமுடியவில்லை.

தண்டவாளம் வழியாக நடந்தனர்

இதையடுத்து அவர்களில் 14 பேர் சொந்த ஊருக்கு நடந்து செல்ல திட்டமிட்டனர். சாலை வழியாக சென்றால் போலீசில் சிக்கி கொள்வோம் என நினைத்து ரெயில் தண்டவாளம் வழியாக நடக்க தொடங்கினர். நேற்று காலையில் கருங்கலில் இருந்து புறப்பட்ட அவர்கள் திங்கள்சந்தை, சுங்கான்கடை வழியாக மாலை 6 மணியளவில் பார்வதிபுரம் பகுதியை அடைந்தனர்.

அப்போது இவர்கள் தண்டவாளம் வழியாக நடந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் சிலர் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வடமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் வேலை இல்லாததால் சாப்பாடு கிடைக்காமல் அவதி படுவதாகவும், இதனால், நடந்தே ஊருக்கு செல்வது என புறப்பட்டதாகவும் கூறினர்.

தாசில்தார் விசாரணை

இதுகுறித்து கல்குளம் தாசில்தாருக்கும், ஆழ்துளை கிணறு நிறுவன உரிமையாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கல்குளம் தாசில்தார் ஜெகதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, இந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 15 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கொடுத்திருப்பது தெரிய வந்தது.

மேலும், சொந்த ஊருக்கு சிறப்பு ரெயில் மூலம் செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவும் செய்துள்ளனர்.

ஆழ்துறை கிணறு உரிமையாளர் கூறும் போது, தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுத்த பின்பும், அவர்கள் தண்டவாளம் மூலம் நடந்து செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த தொழிலாளர்களை போலீசார் மீண்டும் கருங்கலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story