தோவாளையில் மார்க்கெட் செயல்படவில்லை: வீடுகளில் சமூக இடைவெளியுடன் பூ வியாபாரம் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி
தோவாளையில் மார்க்கெட் செயல்படாததால் வியாபாரிகள் தங்கள் வீடுகளில் சமூக இடைவெளியுடன் பூ வியாபாரம் செய்கிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
தோவாளையில் மார்க்கெட் செயல்படாததால் வியாபாரிகள் தங்கள் வீடுகளில் சமூக இடைவெளியுடன் பூ வியாபாரம் செய்கிறார்கள். இதனால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தோவாளை பூ மார்க்கெட்
குமரி மாவட்டம் தோவாளையில் பழமை வாய்ந்த பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவில் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பண்டிகை மற்றும் கோவில் விழாக்களின் போது பூக்களின் விலை அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் குறைவாக இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தோவாளை பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூக்கள் செடியிலேயே வாடி அழிந்தன.
சமூக இடைவெளி
இந்தநிலையில் சமூக இடைவெளியுடன் பூ மார்க்கெட்டை நடத்த அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாகவும், சமூக இடைவெளி பிரச்சினை காரணமாகவும் வியாபாரிகள் பூ வியாபாரத்தை மார்க்கெட்டில் வைத்து தொடராமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் அவரவர் வீட்டில் வைத்தே குறைந்த அளவில் பூ வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள். நேற்று பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
அரளி பூ- ரூ. 40, பிச்சி- ரூ.250, மல்லிகை- ரூ. 100, முல்லை- ரூ.250, சம்பங்கி-ரூ. 25, வாடாமல்லி ரூ.30, துளசி-ரூ.20, தாமரை (100 எண்ணம்) ரூ.300, கோழிப்பூ - ரூ.30, பச்சை- ரூ. 6, கனகாம்பரம்-ரூ.500, ரோஸ் பாக்கெட்- ரூ. 10, பட்டன் ரோஸ்- ரூ.50, ஸ்டெம் ரோஸ்- ரூ 150, கேந்தி மஞ்சள்-ரூ.25, கேந்தி சிவப்பு ரூ.30, சிவந்தி மஞ்சள் ரூ.70, சிவந்தி வெள்ளை-ரூ.70, கொழுந்து- ரூ.50, மருக்கொழுந்து-ரூ.60 என விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
25 சதவீதம் விற்பனை
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டும் இல்லாமல் சிறு, பெரு வியாபாரிகளும் தொழில் செய்ய முடியாமல் கஷ்டபட்டு வந்தனர். அரசு பூ மார்க்கெட் இயங்க அனுமதி அளித்தது. இருப்பினும் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பூ மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அவரவர் வீடுகளிலேயே முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்து வருகிறோம்.
வெளியூரில் இருந்து பொதுவாக 20 டன் பூக்கள் வரும். ஆனால் தற்போது 4 டன் பூக்கள் வருகிறது. மேலும் உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களில் இருந்து பிச்சி மற்றும் மல்லி வருகிறது. இவற்றை வைத்து வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் இருந்து சிறுவியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பு நடந்த வியாபாரத்தில் 25 சதவீதம் வியாபாரம் தற்போது நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story