கோவை சுந்தராபுரத்தில் பரபரப்பு: சொந்த ஊர் செல்ல விண்ணப்பிக்க திரண்ட வடமாநில தொழிலாளர்கள் - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் எச்சரிக்கை


கோவை சுந்தராபுரத்தில் பரபரப்பு: சொந்த ஊர் செல்ல விண்ணப்பிக்க திரண்ட வடமாநில தொழிலாளர்கள் - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 May 2020 10:15 PM GMT (Updated: 10 May 2020 2:38 AM GMT)

கோவை சுந்தராபுரத்தில் சொந்த ஊர் செல்ல விண்ணப்பிக்க திரண்ட வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் எச்சரித்தனர்.

போத்தனூர்,

கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவை சுந்தராபுரம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் வட மாநில தொழிலாளர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. போலீசார் மற்றும் வருவாய்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில் விண்ணப்பிக்க அந்த பகுதியில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் திரண்டனர்.

முகாமில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பலர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக முண்டியடித்தவாறு நின்றிருந்தனர். இதனால் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை போதிய இடைவெளி விட்டு வரிசையாக நிற்கும்படி போலீசார் எச்சரித்தனர். அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக திரண்டனர். இதையடுத்து போலீசார், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், வரிசையாக நிற்காவிட்டால் தடியடி நடத்தப்படும் என்று லத்தியை காண்பித்து எச்சரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story